லடாக்கில் சிக்கி தவிக்கும் நடிகர் மாதவன்

நடிகர் மாதவன், ஜம்மு காஷ்மீரில் உள்ள லேயில் படப்பிடிப்பிற்காக சென்றபோது அங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்.;

Update:2025-08-28 19:02 IST

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டு வெளியான இப்படம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மாதவன் இந்தியில் வெளியான சைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுடன் நடித்துள்ளார். மாதவன் கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.

நடிகர் மாதவன் படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் இருக்கும் லே என்ற இடத்துக்குச் சென்று இருந்தார். அங்கு தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. லே பகுதி முழுவதும் பனிபடர்ந்து அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு இருக்கிறது. விமான நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால் மாதவனால் ஹோட்டல் அறையில் இருந்து வெளியில் வர முடியவில்லை. அவர் தொடர்ந்து ஹோட்டலில் முடங்கி கிடக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “லடாக் மலை உச்சியில் லே பகுதியில் இருக்கிறோம். கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக லே விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விரைவில் வீடு வந்து சேருவேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் லடாக்கிற்கு வரும்போது இது போன்றுதான் நடக்கிறது. கடைசியாக 2008ம் ஆண்டு ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்புக்கு வந்தபோது இதே போன்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் படப்பிடிப்புக்காக காத்திருந்தோம். இப்போதும் அதே நிலைதான் இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் சிக்கி இருக்கிறோம். மழையால் விமானம் இல்லை. விரைவில் வானம் தெளிவாகும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 3 இடியட்ஸ் படத்தின் குறிப்பிட்ட பகுதி லடாக்கில்தான் படமாக்கப்பட்டது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணுதேவி கோயிலுக்கு புனித பயணம் சென்ற ராஜஸ்தானை சேர்ந்த 4 சகோதரர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். வைஷ்ணுதேவி கோயிலுக்கு புனித பயணம் மேற்கொண்ட 30 பேர் காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்