பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு
தேரின் அச்சு முறிந்து நின்றபோது, கீழே இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றதால் இறைவனுக்கு திருவிற்கோல நாதர் என்று அழைக்கப்படுகிறார்.;
சென்னை - அரக்கோணம் ரெயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் கூவம் திரிபுராந்தகர் கோவில் உள்ளது. இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர அசுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்ட தலமாகும். சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.
தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமான் புறப்பட்டபோது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் அவர் சென்ற தேரின் அச்சு முறிந்து விட்டது. இது விநாயகரின் செயல்தான் என்பதை உணர்ந்த சிவபெருமான், விநாயகரை நினைத்து மனதார வேண்டினார். அதன்பின்பு விநாயகர் தேர் சக்கரத்தை சரி செய்ய, சிவபெருமான் தேரில் ஏறிச் சென்று திரிபுர அசுரர்களை வென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இவ்வாறு தேரின் அச்சு முறிந்து கூரம் பூமியில் பதிந்த இடம் என்பதால் இத்தலம் கூரம் என்று அழைக்கப்பட்டு பின்பு மருவி கூவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார். திரிபுராந்தக வதத்திற்கு சென்றதால் இத்தல இறைவனுக்கு திரிபுராந்தகர் என்றும், அம்பாளுக்கு திரிபுராந்தகி அம்மன் என்ற பெயரும் ஏற்பட்டது.
தேர் சக்கர அச்சு முறிந்து நின்றபோது, தேரில் இருந்து இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றார். இதனால் இத்தலத்து இறைவனுக்கு திருவிற்கோல நாதர் (திரு + வில் + கோலம்) என்றும் பெயர் உள்ளது. சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது மட்டும் சுவாமி வில் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சிவபெருமானின் இந்த தரிசனத்தை காண்பது மிகவும் விசேஷமாகும்.