வருகைப்பதிவு குறைவு.. கல்லூரி மாணவியை வீட்டுக்கு தனியாக அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த அதிர்ச்சி
முதலில் வீட்டுக்குள் செல்ல மறுத்த மாணவியை, கட்டாயப்படுத்தி பேராசிரியர் தனது வீட்டுக்குள்ளே அழைத்து சென்றார்.;
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் 20 வயதான மாணவி பி.சி.ஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். அந்த கல்லூரியில் பேராசிரியராக சஞ்சீவ்குமார் மண்டல் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் பி.சி.ஏ. பிரிவின் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், மாணவி சரியாக கல்லூரிக்கு வராத காரணத்தால், அவரது வருகை பதிவு குறைவாக இருந்தது.
இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காகவும், தனது வீட்டில் சாப்பிட வரும் படியும் மாணவிக்கு சஞ்சீவ்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள சஞ்சீவ்குமார் வீட்டுக்கு மாணவி சென்றுள்ளார். ஆனால் வீட்டில் சஞ்சீவ்குமாரின் குடும்பத்தினர் யாரும் இல்லை. அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனால் முதலில் வீட்டுக்குள் செல்ல மாணவி மறுத்துள்ளார். அவரை கட்டாயப்படுத்தி சஞ்சீவ்குமார் வீட்டுக்குள்ளே அழைத்து சென்றுள்ளார். பின்னர் வருகை பதிவு மிகவும் குறைவாக இருப்பதாகவும், அந்த பிரச்சினையை தான் சரி செய்து கொடுப்பதாகவும் மாணவியிடம் அவர் கூறியுள்ளார். இதற்காக தான் சொல்லும்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி மாணவிக்கு சஞ்சீவ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் மாணவியை அவரது தோழி ஒருவர் செல்போனில் அழைத்துள்ளார். இதனால் தனக்கு அவசர அழைப்பு வந்திருப்பதாகவும், தான் உடனே இங்கிருந்து புறப்பட வேண்டும் என்றும் சஞ்சீவ்குமாரிடம் சொல்லி விட்டு, அவரது வீட்டில் இருந்து மாணவி வெளியே வந்து விட்டார். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோர், சக மாணவிகளிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திலக்நகர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் சஞ்சீவ்குமாரை கைது செய்தனர்.