அரசியலமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி கொலை செய்கிறார் - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்றார்;
பெங்களூரு,
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கர்நாடகாவின் மைசூருவில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, அரசியலமைப்பு சாசனத்தில் திருத்தம் செய்வது அல்லது அதை மீண்டும் எழுதுவது குறித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் பேசி வருகின்றன. ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும் அரசியலமைப்பு சாசனத்தை மாற்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அரசியலமைப்பு சாசனத்தை மாற்ற அனுமதித்தால் மக்களுக்கு எந்த உரிமையும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தரமாட்டார்கள்.
மோடி, அரசியலைமைப்பு சாசனத்தால்தான் நீங்கள் முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். நாடளுமன்றத்திற்குள் நுழையும்முன் நீங்கள் (மோடி) அரசியலமைப்பு சாசனத்தை வணங்கினீர்கள். ஆனால், அதே அரசியலமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி இன்று கொலை செய்கிறார். பிரதமர் மோடி 42 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்லவில்லை'
இவ்வாறு அவர் கூறினார்