இந்தியா ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு ஒன்றை அரசு தயாரித்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.;

Update:2025-09-06 00:06 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவுக்கு அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனாலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. தொடர்ந்து ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது.

ஏற்கனவே இந்தியாவுக்கு கச்சா எண்ணை விலையில் தள்ளுபடி சலுகையை ரஷியா அளித்து வருகிறது. ஜூலை மாதம் பீப்பாய்க்கு ஒரு அமெரிக்க டாலரும், கடந்த வாரம் 2.50 அமெரிக்க டாலரும் தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணை விலையில் மேலும் தள்ளுபடியை ரஷியா அளித்து உள்ளது. அமெரிக்க வரிகளின் சுமையை இந்தியா எதிர்கொண்டு வருவதால், ரஷிய எண்ணையின் விலையில் இந்தியாவுக்கு ஒரு பீப்பாய்க்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர்கள் வரை குறைத்துள்ளது. செப்டம்பர் பிற்பகுதியிலும், அக்டோபர் மாதத்திலும் ஏற்றுமதி செய்யப்படும் ரஷியாவின் யூரல் தரத்திலான கச்சா எண்ணை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவும், அமெரிக்காவும் ரஷியாவின் கச்சா எண்ணெயை தவிர்த்துள்ள நிலையில், ரஷியாவின் கடல்வழி கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது.

இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன், “இந்தியா தொடர்ந்து ரஷிஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும். இந்த முடிவு தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்டது. நமது தேவைகளுக்கு ஏற்றதை வாங்குவது நமது முடிவு, எங்கிருந்து எண்ணெய் வாங்குகிறோம், அதை நாம் தீர்மானிக்க வேண்டும். லாபம் ஈட்டுவதற்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுமையாக விழும் மறைமுக வரியைப் பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் அனைத்து பொருட்களில் விலை குறையும். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். சில பொருட்களைத் தவிர அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்கப்பட்டது. சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும். அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு ஒன்றை அரசு தயாரித்து வருகிறது”என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்