மும்பை: ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலை
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் ஷாநூர்வாடி பகுதியில் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடித்து செல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் ஷாநூர்வாடி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை உள்ளது. அதன் அருகில் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை வாடிக்கையாளர் ஒருவர் அங்கு பணம் எடுக்கச்சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வங்கிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வங்கி கிளை மேலாளர் ஜவகர்நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை கும்பல் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடிக்க முயன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் காரில் ஏ.டி.எம். மையத்துக்கு வந்துள்ளனர். அந்த கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தில் கயிறை கட்டி கார் மூலம் இழுத்துள்ளனர். ஆனால் அதனை பெயர்க்க முடியவில்லை. ஏ.டி.எம். எந்திரத்தை அப்படியே அலாக்காக தூக்கி சென்றுவிடலாம் என்று நினைத்த அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அந்த கும்பல் ஸ்குரு டிரைவர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளை கும்பல் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கட்டி பெயர்த்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.