ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் - மத்திய அரசு தகவல்
அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.;
புதுடெல்லி,
அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் 50 சதவீத வரியை சந்தித்து வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசின் உதவியை நாடி உள்ளனர். அனைத்து பிரச்சினைகளும் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களுக்கு உதவ ஆக்கப்பூர்வமான பணிகள் நடந்து வருகின்றன. ஏற்றுமதியை பெருக்குவது அவர்களுக்கு உதவும்.
ஏற்றுமதியாளர்களுக்கு உதவ ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் என்ற புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அப்பணியை மத்திய அரசு விரைவுபடுத்தி உள்ளது. ஏற்றுமதி பெருக்கம், புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் அமல், வளரும் உள்நாட்டு சந்தை ஆகியவை அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கத்தில் இருந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் விடுபட உதவும்.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம். அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.