குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்

Update:2025-06-12 14:20 IST
Live Updates - Page 2
2025-06-12 11:58 GMT

அகமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

முன்னதாக விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. இந்த நிலையில் மாலை 4.05 மணியளவில் அகமதாபாத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் மிகுந்த கவனத்துடன் பின்பற்றப்பட்டு வருகின்றன.


அகமதபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது - ராகுல் காந்தி
2025-06-12 11:23 GMT

அகமதபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது - ராகுல் காந்தி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து வேதனையளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“அகமதாபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதற்றம் கற்பனை செய்ய முடியாதது. இந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது - ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2025-06-12 11:15 GMT

விமான விபத்து: ‘ஏர் இந்தியா’ முகப்பு படம் கருப்பு நிறமாக மாற்றம்

குஜராத் விமான விபத்தின் எதிரொலியாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை கருப்பு நிறமாக மாற்றியுள்ளது. அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததாகவும், அதில் 169 பேர் இந்தியர்கள் என்றும் ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2025-06-12 11:05 GMT

குஜராத் விமான விபத்து: அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடல்

விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல இருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

2025-06-12 10:43 GMT

குஜராத் விமான விபத்து வேதனை அளிக்கிறது - இங்கிலாந்து பிரதமர்

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இங்கிலாந்து நாட்டவர்கள் பலரை ஏற்றிக்கொண்டு லண்டனுக்கு புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன. அங்குள்ள நிலைமை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2025-06-12 10:07 GMT

அகமதாபாத் விமான விபத்து.. ஏர் இந்தியா வெளியிட்ட தகவல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் முதலில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இதை விபத்து என குறிப்பிடாமல் சம்பவம் (Incident)குறிப்பிட்டிருந்தது.

“அகமதாபாத்-லண்டன் காட்விக் வழித்தடத்தில் சென்ற AI171விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியது. இதுபற்றி விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் கூடுதல் தகவல்களை ஏர் இந்தியாவின் இணையதளம் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறோம்“ என அதில் கூறப்பட்டிருந்தது.

சம்பவம் என்று கூறியதால் இது விபத்தா? அல்லது சதி செயலா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. அதன்பின்னர் வெளியிட்டுள்ள பதிவில் விபத்து என குறிப்பிட்டிருந்தது. அதில், முழு விவரங்களையும் வெளியிட்டது.

அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டினர் என்றும் கூறப்பட்டிருந்தது.

2025-06-12 10:01 GMT

விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.

2025-06-12 09:43 GMT

விமான போக்குவரத்து துறை மந்திரிக்கு பிரதமர் அறிவுறுத்தல்

விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார்.

தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். தொடர்புடைய அனைத்து துறைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றி வருவதாகவும், ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்றும் விமான போக்குவரத்து துறை மந்திரியின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

2025-06-12 09:28 GMT

குஜராத் விமான விபத்து - வெளியான வீடியோ

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களில் மெக்நானிநகர் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 


2025-06-12 09:15 GMT

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் காந்திநகரில் இருந்து விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன. மொத்தம் மூன்று குழுக்கள் வதோதராவில் இருந்து அகமதாபாத்திற்கு அனுப்பி வைக்கப்பப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்