ஆர்.சி.பி வெற்றிப்பேரணி- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
கர்நாடக கிரிக்கெட் சங்கம், கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியினருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.;
பெங்களூரு,
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளதால், ஆர்.சி.பியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி திடல் வரை இன்று பேருந்து பேரணி நடத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும், கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆளுநர் ஆகியோர் பங்கேற்கும் பாராட்டு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெங்களூரு விதான் சவுதா வரும் ஆர்.சி,பி அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலின் 6-வது கேட் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்கள் மீது கர்நாடக போலீசார் லேசான தடியடி நடத்தினர். சின்னசாமி மைதானத்தில் கேட் நம்பர் 6,7,12,18 ஆகிய வாயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.
இந்தநிலையில் 6-வது கேட் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
25க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டநெரிசல் காரணமாக மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூருவில் ஒரே இடத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்.சி.பி வெற்றிப்பேரணியை பார்க்க வந்த 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்கம், கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியினருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.