அதிர்ச்சி சம்பவம்: விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதி
கிராம மக்கள் அந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூரு தாலுகாவில் உள்ள மத்தூர் பகுதியில் வசித்து வருபவர் மல்லப்பா. இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ராமப்பா கிருஷ்ணா (வயது 35), மற்றும் அவரது மனைவி ஜக்குபாய் (30). இவர்கள் 2 பேரும் நிலத்தகராறு தொடர்பான முன்விரோதம் காரணமாக மல்லப்பாவின் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லப்பாவை, அந்த தம்பதி தாக்கினர். இதில் காயமடைந்த மல்லப்பா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் மல்லப்பா இதுகுறித்து முத்கல் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் ராமப்பா மற்றும் ஜக்குபாயிடம் விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்தில் இருந்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடப்பா நாயக்கும், ஏட்டு ராமப்பா ஆகிய 2 பேரும் சென்றிருந்தனர்.
இவர்களின் விசாரணையின் போது கோபமடைந்த ராமப்பா, ஜக்குபாய் ஆகியோர் சேர்ந்து 2 போலீஸ்காரர்களையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸ்காரர்களின் ஆடைகளையும் கிழித்து எறிந்து உள்ளனர். இதனை தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற வெங்கடப்பாவை பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர், பின்னர் செல்போனையும் அவரிடம் இருந்து பறித்து தரையில் போட்டு உடைத்து உள்ளனர்.
இதையடுத்து அந்த வழியாக வந்த மல்லப்பாவின் மகன் ராகவேந்திரனையும் கம்பத்தில் கட்டி வைத்து உருட்டு கட்டை மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர். இதையடுத்து போலீசாரை தாக்கிய சம்பவம் முத்கல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் வெங்டேஷ் விரைந்து வந்தார். அங்கு சென்று கம்பத்தில் கட்டி இருந்தவர்களை மீட்க முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசையும் தம்பதி சரமாரியாக தாக்கினர்.
பின்னர் கிராம மக்கள் போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக லிங்கசுகூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடப்பா நாயக் ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தம்பதி மீது முத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.