இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
அனைத்து ஊடக சேனல்களுக்கும் மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், சமூக விழிப்புணர்வு இயக்கத்திற்கான நிகழ்ச்சிகள் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளில், பாதுகாப்புக்கான வான்வழி சைரன் ஒலியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக முப்படை தளபதிகளும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க, அவரது இல்லத்திற்கு வந்தனர்.
மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளநிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமரின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பதற்றத்தை தணிப்பது குறித்து பரிசீலிப்போம்; பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி
இந்தியா தாக்குதலை தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க தயார் எனவும் இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று பேசியுள்ளார். மேலும், நாங்கள் பொறுமையை இழந்ததால்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்
காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்? - உமர் அப்துல்லா கேள்வி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போர் பதற்றத்தை நிறுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளம் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவத்தில் தன்னார்வலர்கள் பணி.. சண்டிகரில் குவிந்த இளைஞர் படை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளநிலையில், இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பெண்கள், இளைஞர்கள் என பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
மூடிய பாக்லிஹார் அணை திறப்பு: சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா
ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் வேறுவழியில்லாமல் பாக்லிஹார் மற்றும் சலால் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியில் தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போர்ப்பதற்றம்: ஆக்கபூர்வமான பங்கு வகிக்கத் தயாராக உள்ளோம் - சீனா
அமைதியான வழிகளில் அரசியல் தீர்வுக்கான பாதைக்கு திரும்ப வேண்டும் என்று அண்டைநாடான சீனா வலியுறுத்தி உள்ளது.
போர் பதற்றம்: ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் - அமெரிக்கா அறிவுறுத்தல்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆதரவு தரும் என வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமெரிக்க செயலாளர் மார்கோ ருபியோ உறுதி அளித்துள்ளார்.
மேலும் மோசமான விளைவுகளை தவிர்க்க போர் பதற்றத்தை தணித்து, நேரடி தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.