இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது என்றும், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் அனைத்து மொழிகளையும் வளர்ப்பது சாத்தியம் இல்லை என்றும் உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
யமுனை நதியை அதிகம் மாசுபடுத்தும் டெல்லி
யமுனை நதியின் மொத்த மாசுபாட்டில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் 76 சதவீதம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றம், நதி மாசுபடுவதற்கு முதன்மை காரணமாக உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.
கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்
கனடாவில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும், அவரை சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் மோடி கூறி உள்ளார்.
உக்ரைனின் 6 பிராந்தியங்களில் ரஷியா அதிரடி தாக்குதல்
உக்ரைனின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ரஷியா நேற்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைனின் 6 பிராந்தியங்களை குறிவைத்து நடத்திய வான் தாக்குதலில் உக்ரைனுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 407 டிரோன்கள் மற்றும் 44 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னத் தெரிவித்தார். சுமார் 30 ஏவுகணைகளையும் 200 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?
அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" என எலான் மஸ்க் பதிவிட்டு, கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார். அவரது கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர்.
இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளுக்கான உரிமத்தை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்வு
ரிசர்வ் வங்கி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 85.68 ஆக உள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் அதிக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், குறைவாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.