50 சதவீதம் வரி அமல்: ரூ.2,500 கோடிக்கு தங்க நகை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது.;
கோவை,
தொழில் நகரான கோவையில் இருந்து தங்க, வைர நகைகள் அதிகளவில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட நகை, கையினால் தயாரிக்கப்பட்ட நகைகள், காசு மாலை, மாங்கா மாலை போன்றவை அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் ஏராளமானவர்கள் வசித்து வருவதால், கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நகைகளை ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த இறக்குமதி வரி தங்க நகை தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை தங்கநகை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
அமெரிக்காவிற்கு தங்க நகை அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளில் இந்தியா முக்கியமானது. மும்பை, கொல்கத்தா, கோவை போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் தங்க நகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 19.9 பில்லியன் மதிப்பில் தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அவ்வளவு இருக்குமா? என தெரியவில்லை.
தற்போது தங்கம் ஒரு கிராம் ரூ.9,350 என உள்ளது. தங்கத்தின் விலை அங்கு விதிக்கும் வரிச்சுமை காரணமாக இன்னும் அதிகரிக்கும். தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் ஆர்டர் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றனர். இறக்குமதிவரி விதிப்பு காரணமாக கோவை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2,500 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மற்ற மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் நகை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்திய நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையும் உயரும். அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால் பொருளாதாரம் பாதிப்பதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கும்.
எனவே உடனடியாக இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்றும் 15 முதல் 20 நாட்களில் பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, விரைவில் இந்த இறக்குமதி வரி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.