தீபாவளி பட்டாசு புகையால் விமான சேவை பாதிப்பு
தீபாவளி பட்டாசு புகையால் சென்னையில் 15 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.;
சென்னை,
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் தீபாவளி அன்று காலை அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்க முடியவில்லை. மாலை நேரத்தில் மழை சற்று ஓய்ந்ததும் ஒட்டுமொத்தமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. விமான நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் அதிக அளவிலான பட்டாசுகளை தொடர்ச்சியாக வெடித்தனர்.
பட்டாசு புகையால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் இரவு 7 மணிக்கு மேல், விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்களுக்கும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் உடனடியாக அனுமதி கொடுக்கப்படாமல், ஓடுபாதை தெளிவான பின்னரே அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஐதராபாத், லக்னோ, மதுரை, டெல்லி, பெங்களூர், டாக்கா பகுதிகளில் இருந்த வந்த 7 விமானங்கள், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பின்பு தரையிறங்கியது. சென்னையில் இருந்து டெல்லி, கொச்சி, பெங்களூர், கோவை, ஐதராபாத், தோகா, கோலாலம்பூர், ஐதராபாத் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 8 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. பட்டாசு புகை மண்டலத்தால் சென்னை விமான நிலையத்தில் 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
நேற்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. இதனால் மும்பை, பெங்களூரு, கோயம்புத்தூர், விஜயவாடா, மதுரை, ஐதராபாத், கொழும்பு, தூத்துக்குடி, அந்தமான் பகுதிகளில் இந்த வந்த 15-க்கும் மேற்பட்ட விமானங்கள், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைக்காததால் சுமார் 30 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின.
இதைபோல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஐதராபாத்திற்கு புறப்பட்ட ஸ்பைஜெட் விமானம் எந்திர கோளாறு காரணமாக 3 மணி நேர தாமதமாக புறப்பட்டு சென்றது.