சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

இன்று காலை நடந்த இவ்விபத்தில் ஓட்டுநர், பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.;

Update:2025-02-12 16:17 IST

சேலம்,

சேலம் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருந்து கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஆத்தூரில் இருந்து வானகரம் மலை கிராமத்திற்கு ஒரு அரசு பஸ் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றது.

அதில் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்கு செல்வோர் என ஏராளமானோர் காலை மாலை என பயணம் செய்கின்றனர். இந்நிலையில் வானகரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பஸ்சில் பழுது ஏதும் இல்லாத நிலையில் ஓட்டுனர் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். சேலம் மண்டலம் ஆத்தூர் கிளையை சார்ந்த நகர பேருந்து TN30/NO813 ஆத்தூர் பேருந்து நிலையத்தில் 12.02.2025 இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி செல்லும்பொழுது கல்லுக்காடு என்ற இடத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர். சேலம் அவர்கள் தொழில்நுட்ப குழுவினருடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது அப்பேருந்தின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதால்தான் ஏற்பட்டது என ஆய்வில் கண்டறியப்பட்டு அப்பேருந்தின் நடத்துநர் மூலமும் மேற்படி ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதை உறுதி செய்யப்பட்டது. மேலும் இத்தகவல் காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே. தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது போல் பிரேக் பழுது காரணமாக விபத்து ஏற்படவில்லை என்பதனையும், இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவால் பேருந்தை இயக்கியதால்தான் இவ்விபத்து ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டு இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்