திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்
திண்டிவனம் நகராட்சி ஊழியர் மீது கும்பல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டிவனம் நகராட்சி தலைவர் ரம்யா, சென்ற மாதம் 28-ம் தேதி நகராட்சி ஊழியர் முனியப்பனை அழைத்து, பழைய கோப்பு ஒன்றை எடுத்து வருமாறு கூறியுள்ளார். தலைவர் கோரிய கோப்பினை தேடி எடுத்து வருவதற்குள் அவரை அதிகாரத் தோரணையில் அழைத்து, நகராட்சி ஆணையர் அறைக்கு அழைத்து சென்று, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார். தவறேதும் செய்யாத நிலையிலும் ஊழியர் முனியப்பன், சூழல் நிர்ப்பந்தத்தில் மன்னிப்பும் கோரியுள்ளார். இருப்பினும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஊழியரின் சாதி, அவரது பிறப்பு, குடியிருப்பு எல்லாவற்றையும் இழிவுபடுத்தி பேசியதுடன், அவர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
இதற்கு நகராட்சி ஊழியர்கள் நெடுமாறன் உட்பட சிலர் ஆதரவு காட்டியுள்ளனர். நகராட்சி தலைவரின் கணவர் மரூர் ராஜா சாதி ஆதிக்கத்தை காட்டியுள்ளார். மக்கள் நலனையும், ஊழியர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நகராட்சி தலைவரும், அவரோடு இருந்த கும்பலும் நடத்திய வன்முறைச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகத்தை வன்முறை களமாக மாற்றி, சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.