செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.;

Update:2025-11-02 07:43 IST

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(35). நண்பர்களான இருவருக்கும் இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.

இந்த சம்பவம் தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி, அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை விஜயகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் கையெழுத்திட வந்தனர்.

அப்போது போலீஸ் நிலையத்திற்கு உள்ளே முன்விரோதம் காரணமாக மீண்டும் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகராறு முற்றிய நிலையில், போலீஸ் நிலைய வாசலில் ஆத்திரமடைந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்குமாரை சரமாரியாக வெட்டினார். இந்தத் தாக்குதலில் வினோத்குமாரின் கழுத்துப்பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த வினோத்குமாரை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் நிலைய வாசலில் போலீசார் கண் எதிரே நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்