திருச்செந்தூர் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
குலசை கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருச்செந்தூருக்கும் வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.;
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும், குருத்தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், நவராத்திரி விழா நடைபெற்று வருவதாலும், குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடந்து வருவதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் வந்து சாமி தரிசனம் செய்வதால் இன்று காலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையிலிருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.