மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்: 2 பேர் கைது
மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகர வடக்கு வெளி வீதி பகுதிகளில் சோதனை நடத்தினர்.;
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான TACT INDIA பிரைவேட் லிமிடெட்டின் மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் HCH, NBC ஆகிய கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகர வடக்கு வெளி வீதி பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது மேற்கு வங்காளம் ஹவுராவை சேர்ந்த ரமேஷ்குப்தா மற்றும் அங்கித்குப்தா ஆகியோர் போலி தயாரிப்புகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. விசாரணையில் இருவரும் போலி பேரிங்கு, லேபிள் மற்றும் கவர்களை போலியாக தயாரித்து மேற்சொன்ன முன்னணி நிறுவனங்களின் பெயர்களில், சிறிய அட்டை கவர்களில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. எனவே மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.58 ஆயிரத்து 143 மதிப்புள்ள போலி தயாரிப்புகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அமலாக்கப்பணியகம் கூடுதல் டிஜிபி அமல்ராஜ், குற்றப்பிரிவு ஐஜி செந்தில்குமாரி, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சாம்சன் ஆகியோர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-28511587 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.