'பொய்களுடன் ஸ்டாலின்' என பெயர் வைத்திருக்கலாம்: ஜெயக்குமார் விமர்சனம்
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை என்று ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.;
சென்னை,
சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம். தேர்தல் வந்தால்தான் முதல்-அமைச்சருக்கு மக்கள் கண்ணுக்கு தெரிகின்றனர். கொஞ்சம் கூட ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா..? எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டி வைத்து வாங்கிய மனுக்கள் என்னவானது..? சாவியை அவரே வைத்திருந்தார். முதல்-அமைச்சரான பின் மனுக்களை நானே படித்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
நான் முதல்-அமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார். 4 ஆண்டில் தலைமைச் செயலகத்தில் பொதுமக்களை ஒருமுறையேனும் ஸ்டாலின் சந்தித்தது உண்டா?. "பொய்களுடன் ஸ்டாலின்" என்பதே திட்டத்தின் உண்மையான பெயராக இருக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
செய்தி மக்கள் தொடர்புத்துறை இருக்கும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளராக நியமிப்பது ஏன்?. அரசின் திட்டங்களை அமைச்சர்கள் மக்களுக்கு கூறாமல் அதிகாரிகள் கூறினால் அதன் பெயர் எமர்ஜென்சி நிலை. இப்போது மக்களாட்சி இல்லை, அதிகாரிகள் ஆட்சியே நடக்கிறது என்பதற்கு இந்த நியமனமே உதாரணமாகும். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை, அதிகாரிகள் ஆட்சிதான் நடைபெறுகிறது.
கேரளாவை போல் 'ப' வடிவில் மாணவர்களை அமரவைப்பதால் கல்வித்தரம் உயர்ந்து விடுமா? 3,600 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அன்பில் மகேஷ் திறமையற்றவர், அறிவு இருப்பவர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர்களாக நியமிக்கலாம். அன்பில் மகேசை திரைத்துறை அமைச்சராக போடலாம். இவ்வாறு அவர் கூறினார்,