அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை ஐகோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.;
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் போடுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கடந்த ஜனவரி 28ம்தேதி வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேல் முறையீடு செய்துள்ளன. அவைகள் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (18.6.2025) சென்னை ஐகோர்ட்டு "ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும். இல்லையெனில் மாவட்ட கலெக்டர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளில் நடப்படும் கொடிகளுக்கு தலா ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு கட்டணம் வசூலித்தால் கொடிக்கம்பங்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்" என்றெல்லாம் கூறியிருப்பது கவலை அளிக்கிறது.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் இருக்கும் கொடிக்கம்பங்கள் இடமாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜனநாயக நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் முதன்மை பெற்றவை என்பதை கோர்ட்டுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட விபரம் குறித்து அரசு தரப்பில் உண்மையை பிரதிபலிக்கவில்லை என்று யாராவது ஒரு மனுப் போட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு ஐகோர்ட்டு அரசியல் கட்சிகளை அமில வார்த்தைகளில் விமர்சிக்குமா? நிர்வாக அதிகாரிகள் ஐகோர்ட்டை அவமதிப்பதாக கருதுவதா? இப்படியான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கோர்ட்டுகள் பார்வைக்கு தெரிவித்து, அரசியல் கட்சிகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட அனுமதிக்கும் அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை மறு பரிசீலனை செய்து, திருத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், இது தொடர்பாக அரசுத் தரப்பில் வலுவான ஆதாரங்களுடன், வழிவழியாக பின்பற்றப்படும் உரிமைகளை பாதுகாக்க சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.