‘த.வெ.க.வை விமர்சிப்பதை பா.ஜ.க. தவிர்க்கிறதா?’ - வானதி சீனிவாசன் பதில்
கூட்டணி குறித்த முடிவை தேசிய தலைமைதான் சொல்ல வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.;
கோவை,
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு போயிருக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து அவர்களின் கட்சிக்காரர்கள்தான் பதிலளிக்க வேண்டும். அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார் என்பதே நல்ல விஷயம்தான். சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில், உண்மை வெளிவரும்போது நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
எந்த கட்சியையும் விமர்சிப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. அனைத்து கட்சிகள் மீதும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நாங்கள் முன்வைக்கிறோம். அதுமட்டுமின்றி, விமர்சனம் செய்வதால் மட்டுமே கூட்டணி அமையாது என்று சொன்னால், எந்த கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகவே கூட்டணியை சேர்க்கிறார்கள்.
ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, சித்தாந்தம் இருந்தாலும், தேர்தல் என்று வரும்போது யார் வெற்றி பெறக்கூடாது? என்ற கேள்வியே பிரதானமாகி விடுகிறது. மத்தியில் பா.ஜ.க. வரக்கூடாது என்று மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்வார்கள். மற்றபடி அவர்களுக்குள் பொதுவான விஷயம் எதுவும் இருக்காது.
கோவையில் இருந்து முக்கால் மணி நேர தூரத்தில் பாலக்காடு இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் அதிகாரப்போட்டி இருக்கிறது. அதே சமயம், இந்த பக்கம் வந்துவிட்டால் இரண்டு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கொள்கிறார்கள். மதசார்பற்ற கூட்டணி என்று சொல்கிறார்கள். இது என்ன அரசியல்?
காங்கிரஸ் கட்சியைப் பற்றி தி.மு.க. பேசாததா? இன்று அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். முன்பு கரூரில் செந்தில்பாலாஜி குறித்து கடுமையாக விமர்சித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சியில் செந்தில்பாலாஜி சேர்ந்த பிறகு அவரை தியாகி என்கிறார்.
பா.ஜ.க. யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது தேசிய தலைமை சொல்ல வேண்டிய முடிவு. எந்த கூட்டணியை தேசிய தலைமை அறிவித்தாலும், அதற்கு ஏற்றவறு கட்சிக்காரர்களாகிய நாங்கள் வேலை செய்வோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.