திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்
உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முப்பெரும் விழாவில் பங்கேற்கவில்லை.;
கோப்புப்படம்
திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டி பை-பாஸ் சாலை பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விழாவில் பெரியார், அண்ணா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான கனிமொழி எம்.பி.க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவித்து பெரியார் விருதை வழங்கினார்.
இந்த விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியை அவர் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதாக விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி எம்.பி. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார். மேலும், அமைச்சர் துரைமுருகனிடம் அவரது உடல்நிலை குறித்து கனிமொழி எம்.பி. விசாரித்தார்.