காஷ்மீர்-பஹல்காம்: சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல்- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்
காஷ்மீர்-பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 27 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.;
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. 27 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய இந்த செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய தாக்குதலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பாதுகாப்புப் படைகளின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.