கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம்: தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-09-25 19:57 IST

சென்னை,

கள்ளக்குறிச்சியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஏமப்பேர் ரவுண்டானாவில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 46.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட வருகிறது. இதை எதிர்த்து, கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த குமரேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக எந்த ஓர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியரோ நகராட்சி ஆணையரோ வெளியிடவில்லை. கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்வது குறித்து மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தனியாரிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதி நீர்நிலைப் பகுதி, இதனால் பல கால்வாய்கள் அழிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக பொதுமக்களின் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை என்றும், புதிதாக கட்டப்பட உள்ள பேருந்து நிலையம் நகர் பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலும், அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். விதிகளை மீறி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விசாரணையின் இறுதியில் நீதிபதிகள், பேருந்து நிலையம் அமைக்க இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ம் தேதி தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்