அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி: ராஜேந்திர பாலாஜி புகழாரம்
தேர்தல் களத்தில் விஜய் கட்சி கிடையாது என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.;
சிவகாசி,
சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. மன்மோகன் சிங் காலத்தில் அறிவாலயத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டு இருந்த போது காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது திமுகதான். அதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரசுடன், தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணி ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட வெற்றி கூட்டணியாகும். இந்த கூட்டணிதான் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது. தமிழக மக்கள் நலனுக்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் திமுக கூட்டணி தலைவர்களுக்கு பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் சாணக்கியர் என்பதை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். எங்கள் கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். 2026 தேர்தலில் திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் கூறி வருகிறார். அது இந்த ஆண்டின் மிகப்பெரிய காமெடி. தமிழக அரசியலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. இங்கு விஜய்க்கு வேலை இல்லை. தேர்தல் களத்தில் விஜய் கட்சி கிடையாது. பாமகவின் உட்கட்சி பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.