அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக போஸ்டர்கள்: நயினார் நாகேந்திரன் கூறியது என்ன..?
தமிழக மக்கள் எதை நினைத்து தனக்கு வாக்களிப்பார்கள் என்று விஜய் சிந்தித்துப்பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.;
கோப்புப்படம்
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர் பிரச்சினையில் பா.ஜனதாவை விமர்சித்து விஜய் பேசி உள்ளார். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் எத்தனை மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒருவர்கூட இறக்கவில்லை. தூக்கு தண்டனைக்கு செல்ல இருந்த மீனவரை கூட மத்திய அரசு மீட்டு கொண்டுவந்தது. இப்போதும் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தி.மு.க.வுக்கும், தமிழக வெற்றிக்கழகத்திற்கும்தான் போட்டி என விஜய் கூறி இருக்கிறார். விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைத்தால், தமிழக மக்கள் எதை நினைத்து அவருக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் சிந்தித்துப்பேச வேண்டும்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அண்ணாமலை எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும் கட்சியில்தான் இருக்கிறார். இதுபோன்ற தகவல்களை பரப்புவது தி.மு.க.வின் வேலையாகத்தான் இருக்கும். தி.மு.க.வினரே என்னிடம் இதுபோன்று கேள்விகளை கேட்க கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக ஒட்டப்படட போஸ்டர்களை யார் ஒட்டினார்கள் என்று தெரியவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.