சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம்; தொடக்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், குமணன் சாவடி முதல் திருமழிசை வரை 8 கி.மீ. தொலைவுக்கு வாகனத்தில் ஊர்வலம் சென்றார்.;
சென்னை,
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை பெருநகருக்கு தற்போது, 1,180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடங்கி வைப்பதற்காக, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பூந்தமல்லிக்கு புறப்பட்டார். அவர், குமணன் சாவடி முதல் திருமழிசை வரை 8 கி.மீ. தொலைவுக்கு மக்களை சந்தித்தபடியே வாகனத்தில் ஊர்வலம் சென்றார். அப்போது, அவருக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, பூந்தமல்லியில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையோரம் இருந்தபடி அவரை வரவேற்றனர். வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினர். அவர்களில் சிலர் பூங்கொத்துகளையும், சால்வைகளையும் பரிசாக வழங்கினர். அவற்றை அவர் பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து, புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை அவர் பார்வையிட்டு, அதனை தொடங்கியும் வைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தரம் வாய்ந்த நீர் கூடுதலாக கிடைக்க பெறும்.