பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

நமது பிரதமரின் தாயார் குறித்து முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-03 14:57 IST

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இந்தியா கூட்டணியினர் பிஹாரில் நடத்திய கூட்டத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியும் அவரது தாயார் குறித்தும் முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது? பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன?

பூவுலகத்திலிருந்து மறைந்தவர்களைத் தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் நம் தாய்த்திருநாட்டில் தொன்று தொட்டு இருக்கும் வேளையில், மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா? வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்த இந்தியா கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா?

தற்போது வரை இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்காதது, பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களை இழிவுபடுத்துவதில் தவறில்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்