திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள், படகுப் போக்குவரத்து செய்ய திரண்டிருந்த நிலையில் சேவை நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
விழுப்புரம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவர் உயிரிழந்தார். ராகவன் (20) என்பவர் படுகாயங்களுடன் புதுச்சேரி ( மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். செல்வராஜ் (59) குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் மனைவி இந்திராவும் (51) தற்கொலை செய்துள்ளனர். டவுண் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத குடியேறிகள் மீது ட்ரம்ப் அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையால், உள்நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில், 1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் சேமிப்பு நடந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள், குளங்கள் மற்றும் பிற தண்ணீர் தேக்க கட்டமைப்புகளின் வழியே இது சாத்தியப்பட்டு உள்ளது.
1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் என்றால் எவ்வளவு? என நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். கோவிந்த் சாகர் ஏரியில், 900 முதல் 1,000 கன மீட்டர் அளவுக்கு மேல் நீர் தேக்க முடியாது என்றால் பார்த்து கொள்ளுங்கள் என கூறி, தண்ணீர் சேமிப்பு பற்றி அவர் குறிப்பிட்டார்.
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரையும் வங்கி கணக்கு தொடங்க மத்திய அரசு வலியுறுத்தியது. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு: பவானியில் ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து யுவனேந்தல் (55), சக்திவேல் (52) ஆகிய இருவர் உயிரிழந்தனர். டேங்கர் உள்ளே இறங்கி சுத்தம் செய்த மூவரும் மயங்கி விழுந்தனர். செல்லப்பன் (52) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
இதுதவிர, சி-130 விமானம் ஒன்று மீதமுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 38 வீரர்கள் மற்றும் 10 டன்கள் நிவாரண பொருட்களுடன் நைபிடாவை சென்றடைந்தது. அதனுடன், 60 பாராசூட் ஆம்புலன்சுகளுடன் 2 சி-17 ரக விமானங்களும் சென்றடையும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.