இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்;
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாளை தாக்கல் செய்ய வாய்ப்பு
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அறித்த அறிக்கையில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்றும், இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு, கடந்த 12-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
அல்-உம்மா பாஷா உயிரிழந்தார்
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உயிரிழந்தார்.
கோவையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஷா கடந்த பிப்ரவரி மாதம் பிணையில் வந்தார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாஷா, தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
காசாவில் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 மாதங்களாக நீடிக்கும் போரில் காசா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர்? என்று விளக்கமாக கூறவில்லை. ஆனால் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மட்டும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதேசமயம், 17,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்- கார்கே வலியுறுத்தல்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது. மக்களவையில் ஏற்கனவே விவாதம் நடத்தப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “பிரதமர் மோடி உண்மைகளை திரித்து பேசி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பிரதமர் நேரு கடிதங்கள் எழுதியதாக கூறியிருந்தார். நேரு குறித்து இவ்வாறு பேசியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்: இளையராஜா வேண்டுகோள்
இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் - வைரலாகும் மோகன்லாலின் தோற்றம்
மருத்துவக் கல்வி கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் - ராமதாஸ் குற்றச்சாட்டு
வங்காளதேசத்தில் தேர்தல் எப்போது? முகமது யூனுஸ் தகவல்
வங்காளதேசத்தில் 2025-ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026 முதல் பாதியில் தேர்தல் நடத்த முடியும் என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். எனினும், அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட்டு, தேவையான சீர்திருத்தங்களை செய்து முடித்துவிட்டு அதன் பிறகு தேர்தலை நடத்தும்படி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.