இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

Update:2025-06-01 09:38 IST
Live Updates - Page 4
2025-06-01 04:47 GMT

அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் செல்போனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

2025-06-01 04:32 GMT

திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி?

திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக திமுக விதிகளில் திருத்தம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025-06-01 04:29 GMT

செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார் ராமதாஸ்

அன்புமணி ராமதாசுடன் கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று காலை சந்திக்கிறார் . வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்த விவரங்களை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாமகவில் கட்சி நிறுவனருக்கு உள்ள அதிகாரம் குறித்து எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தனது அனுமதி இல்லாமல் நடத்தப்படும் கூட்டங்களில் தனது பெயரையோ, படங்களையோ பயன்படுத்தத் தடை விதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025-06-01 04:25 GMT

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராசி முகாம் இடிப்பு

டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராசி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது. முகாம் பகுதியில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் இடிக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2025-06-01 04:21 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 3,017 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 112.48 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 81.983 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம். தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

2025-06-01 04:19 GMT

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர். தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2025-06-01 04:16 GMT

முதுமலை வனப்பகுதியில் ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்வு செய்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29-ம் தேதி பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

2025-06-01 04:10 GMT

பொதுக்குழுவுக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள, சுற்றுலா மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக புதூர், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதியில் சாலைப்பேரணியாகவும் முதல்-அமைச்சர் செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்