இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

Update:2025-04-07 09:28 IST
Live Updates - Page 2
2025-04-07 10:25 GMT

பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2025-04-07 10:04 GMT

கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ-வுக்கு சொந்தமான இடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

2025-04-07 09:58 GMT

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் விலை உயர்ந்துள்ளது.

2025-04-07 09:52 GMT

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2025-04-07 09:47 GMT

நெல்லை சீதபற்பநல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 6 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் அறுந்த மின்கம்பி - மின்சாரம் துண்டிக்கப்படாததால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழந்தான்.

2025-04-07 08:19 GMT

ஆவடி காவல் ஆணையர் சங்கர் சென்ற கார் விபத்து

ஆவடி காவல் ஆணையர் சங்கர் சென்ற கார் சோழவரம் பகுதியில் விபத்தில் சிக்கியது. பின்னால் வந்த கண்டெய்னர் லாரி குட்டி யானை மீது மோதியதில் குட்டி யானை காவல் ஆணையரின் காரை இடித்தது. குட்டி யானை கார் மீது மோதியதில் காவல் ஆனையர் சங்கர் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். விபத்தில் காவல் ஆனையரின் பாதுகாவலர் மாரி என்பவர் காயமடைந்தார். பொன்னேரியில் முதல்-அமைச்சர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்துவிட்டு திரும்பியபோது விபத்துக்குள்ளானது.

2025-04-07 07:43 GMT

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பதாலும், உலகளாவிய வர்த்தக போரும், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும் இந்திய சந்தைகள் சரிய முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

2025-04-07 07:40 GMT

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அறிவித்துள்ளார். 

2025-04-07 06:40 GMT

வங்கக்கடலில் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி. தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழை நீடிக்கும். வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

2025-04-07 06:05 GMT

டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச இபிஎஸ் முயற்சித்தபோது அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரத்தை பேரவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். இதனையடுத்து சட்டசபை தலைவர் அனுமதி மறுத்ததையொட்டி பதாகைகளுடன் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பேரவை விதி 92(1)ன் கீழ் நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் பற்றி விவாதிக்க முடியாது என அப்பாவு கூறினார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்