உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் நடிகை கஸ்தூரி புனித நீராடினார்.
பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, மத்திய அரசு கொடுத்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன். 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். காத்திருந்து பாருங்கள். அமைச்சர் சார்பில் அறிக்கை வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த உத்தரவு பற்றி பேட்டியளித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்" என கூறியுள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய்க்கு பண கொழுப்பு என விமர்சித்து உள்ளார். அவருடைய இந்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் விவகாரத்தில், முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரும் 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, 3 சுங்கத்துறை அதிகாரிகளை கைது செய்தனர்.
டெல்லியை சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதியாளர்களும் கைது செய்யப்பட்டனர். மைசூர் பருப்பு எனக்கூறி ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை அவருடைய மனைவியுடன் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை பூசாரியாக இருந்த மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவருடைய 85-வது வயதில் இன்று காலமானார்.