இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-13 09:29 IST


Live Updates
2025-10-13 12:11 GMT
 கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் வெளியிட்டுள்ள பதிவில் “நீதி வெல்லும்” என்று தெரிவித்துள்ளார். 
2025-10-13 10:33 GMT

ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை உடனடி தீர்வு முறை தலைவலியாக மாறியுள்ளது - செல்வப்பெருந்தகை

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது. காசோலைகள் ஒரே நாளில் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடுகள், தரமற்ற ஸ்கேன் மற்றும் புதிய முறைக்குப் பயிற்சி பெறாத ஊழியர்கள் காரணமாக, பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாகின்றன.

எனவே ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

2025-10-13 10:32 GMT

கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது - நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

2025-10-13 10:25 GMT

தங்கம் விலை இன்று பிற்பகலிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.440 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு பவுன் ரூ.640 உயர்ந்து ரூ.92,460க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று காலை வெள்ளியின் விலை ஒரு கிலோக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2,000 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோக்கு ரூ.7,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,97,000க்கு விற்பனையாகிறது.

2025-10-13 10:03 GMT

2025 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் பிலிப் அகியோன் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்தவர். ஏனைய இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

2025-10-13 07:57 GMT

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. 

இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, பிளஸ்-1 பொதுத்தேர்வு இனி கிடையாது என மாநில பள்ளிக்கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி வந்த நிலையில் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2025-10-13 07:29 GMT

இஸ்ரேல் சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்குப்பின் காசாவில் அமைதியை கொண்டுவருவது தொடர்பாக காசா அமைதி ஆலோசனை கூட்டம் எகிப்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் எகிப்து அதிபர் எல் சிசி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குமுன் ஹமாஸ் ஆயுதக்குழுவால் விடுதலை செய்யப்படும் இஸ்ரேலிய பணய கைதிகளை டொனால்டு டிரம்ப் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

2025-10-13 06:54 GMT

கரூர் துயரம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்

சென்னையில் த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெளியே நுழைவு வாசல் பகுதியில், அக்கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்