இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

Update:2025-10-13 09:29 IST
Live Updates - Page 3
2025-10-13 04:29 GMT

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகளில் (B.Tech., M.E., B.Sc., (NS) and DNS) சேர “காமன் என்டரன்ஸ் டெஸ்ட்” (Common Entrance Test) (IMU-CET) என்னும் நுழைவுத்தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

2025-10-13 04:27 GMT

கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகில் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது. இதில், காரில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் போராடினார்கள். இந்நிலையில், காரில் இருந்த 3 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

2025-10-13 04:23 GMT

அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி; 20 பேர் காயம்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் செயின்ட் ஹெலினா தீவு பகுதியில் உணவு விடுதியுடன் கூடிய பார் ஒன்று உள்ளது. இதில், மதுபானங்களுடன் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும். இதில், பலர் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது, திடீரென சிலர் துப்பாக்கிகளால் பலமுறை சுட்டுள்ளனர்.

இதில் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் பாரில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பியோடினார்கள். சம்பவம் நடந்தபோது, நூற்றுக்கணக்கானோர் அந்த பாரில் இருந்துள்ளனர்.

2025-10-13 04:19 GMT

வைரலாகும் நடிகை நபா நடேஷின் பதிவு

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கலக்கி வரும் நடிகை நபா நடேஷ். சுதீர் பாபு நடித்த நன்னு டோச்சுகுண்டுவதே படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான நபா நடேஷ், பின்னர் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார்.

2025-10-13 04:13 GMT

தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட எஸ்.எம்.நிர்மல்குமார் நேற்று திண்டுக்கல் ஜே3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்.எம்.நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

2025-10-13 04:11 GMT

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. கிடுகிடுவென அதிகரிப்பதும், பின்னர் சற்று சரிவதும் என்ற நிலையிலேயே பயணிக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 2 முறை விலை மாற்றத்தையும் சந்திக்கிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்து இருந்தது. இதேபோல் பிற்பகலில் கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் அதிகரித்து இருந்தது. ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,525-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2025-10-13 04:07 GMT

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.  தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு கடந்த 10-ந்தேதி வரையில் தீயணைப்புத் துறைக்கு 9 ஆயிரத்து 549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

இதில் நிரந்தர பட்டாசு கடைகள் வைப்பதற்கு 2 ஆயிரத்து 751 விண்ணப்பங்களும், தற்காலிக கடைகள் அமைக்க 6 ஆயிரத்து 702 விண்ணப்பங்களும் வந்துள்ளன.

போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.

2025-10-13 04:02 GMT

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்