இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

Update:2025-06-14 08:42 IST
Live Updates - Page 3
2025-06-14 05:24 GMT

தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரை - விவசாயிகள், பொதுமக்கள் கவலை


தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.67 அடி வரை நீர் சேமிக்கப்பட்டுள்ளநிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 981 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரைகள் குவியல் குவியலாக பொங்கிச் செல்வதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

2025-06-14 05:19 GMT

மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை


நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிப்பதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-06-14 05:16 GMT

டெல்லிக்கு தலைமை மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி. உதயகுமார் பேச்சு


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், “டெல்லிக்கு தலைமை பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி என பாஜக மத்திய தலைமை தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறது.

இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. எடப்பாடி தலைமையில்தான் அதிமுக ஆட்சி மலரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2025-06-14 05:03 GMT

பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்


பிரபல கிராமிய பாடகி 'கலைமாமணி' கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) வயது மூப்பால் இன்று உயிரிழந்தார்.

'ஆண்பாவம்' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானார் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்.

2025-06-14 04:58 GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா


தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

2025-06-14 04:45 GMT

தரிசனம் செய்ய 18 மணி நேரம்.. திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச டிக்கெட்டில் தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வார விடுமுறை என்பதால் 31 அறைகளும் நிரம்பியதால் 2 கி.மீ வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று மட்டும் 75,096 பேர் தரிசனம் செய்து ரூ.3.93 கோடி காணிக்கை செலுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-06-14 04:41 GMT

நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா


தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை தவெக தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்

2025-06-14 04:30 GMT

மீண்டும் எகிறத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


2025-06-14 03:47 GMT

ஆமதாபாத் விமான விபத்து: உயர்மட்ட பல்துறை குழு அமைப்பு


ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், கையாளவும் வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கவும் இந்த குழு கவனம் செலுத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-06-14 03:45 GMT

அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


திருப்பூர் - உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியில் 85 அடி வரை நீர் நிரம்பி உள்ளது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்