நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, எட்டாவது மைல், படப்பிடிப்பு தளம், பைன் காடுகள், கேரன்ஹில் மற்றும் 9வது தளம் ஆகிய இடங்கள் மூடப்பட்டுள்ளன.
ஜெகன் மூர்த்தி ஆஜராக உத்தரவு
17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்படும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர் முன் ஜாமின் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்தவும் காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறபித்துள்ளது. ஆள் கடத்தலுக்கு ஜெயராமனின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
குஜராத் விமான விபத்து; 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்படுவதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுவரை 87 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாகவும், 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பலர் குஜராத்தின் ஜுனாகத், பாவ்நகர், கேதா, மெஹ்சானா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி
தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல; இரு தலைவர்களும் பேச வேண்டும். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசை. பாமகவில் சுமூக தீர்வு ஏற்படுவது இருவரின் கையில்தான் உள்ளது. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என்பதை தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றோம். அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம்.
இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கு உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்
ஜெர்மனியின் பிராங்க்புர்ட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட ‘லுப்தான்சா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-9 டிரீம்லைனர்’ ரக விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் பிராங்க்புர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகிய அமெரிக்க ராணுவ அனிவகுப்பு
அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தலைமையில் நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. வீரர்கள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல், பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு நடப்பதைப் போல மெதுவாக சென்றதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு
தெலங்கானா ஐகோர்ட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் 'சவுதியா ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான SV 3112 விமானம் தரையிறங்கியது. சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில், சுமார் 250 ஹஜ் பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் இந்த விமானம் இன்று லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அதன் இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமான உடனடியாக விமானத்தை நிறுத்தி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹைட்ராலிக் கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில் அதீத வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு
கல்லூரி திறப்பை ஒட்டி சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் ஊர்வலமாக வர இருப்பதாக கிடைத்த தகவலால் அதனை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரப் பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.
தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கு விற்பனையாகிறது.