பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது - கலெக்டர் ஆய்வு
ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னரே இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் மாற்று வழி மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்
டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பரிந்துரைத்த பாகிஸ்தான், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரே விமானத்தில் அண்ணாமலை, சீமான்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒரே விமானத்தில் மதுரை வந்துள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அண்ணாமலையும், சொந்த கட்சி நிகழ்ச்சிக்காக சீமானும் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - இருவர் கைது
aபஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, உணவு, போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்த பர்வேஸ், பஷீர் ஆகிய இருவரை என்ஐஏ கைது செய்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான்., நாட்டவர்கள் என்பதும், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்.22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பொழிவு
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 10 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இயல்பான நிலையில் 38.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 42.5 மி.மீ மழை பொழிந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் குவியும் பக்தர்கள்
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை தரிசிக்க பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மாநாடு இன்று நடப்பதால் முருகனின் அறுபடை அருட்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை - எல்.முருகன் பேட்டி
மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கட்சி சார்ந்த மாநாடு அல்ல; அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு இதுவாகும். முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை -என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.