அனைத்து மாவட்டங்களிலும் அலெர்ட்டாக இருக்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளிலும், மழைநீர் தேங்கும் பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “மழை பாதிப்பு குறித்து தொலைபேசியின் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைபேசி மூலமாக வந்த புகாரை அடுத்து, நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றேன். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அலெர்ட்டாக இருக்கிறோம்” என்று கூறினார்.
சென்னையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சமூக ஊடகங்களில் வரப்பெற்ற புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
12 மணிநேரத்தில் வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு குறைந்தது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து - அரசு பேருந்து மோதல்; 3 பேர் படுகாயம்
சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் கிரேன் உதவியுடன் பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டன.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது!
கனமழை எச்சரிக்கையாக நேற்று 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி அளவில் 500 கன அடியாக அதிகரிக்க உள்ளனர்
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.