இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
உலக தர வரிசையில் 2-ம் இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்திய பி.வி. சிந்து; வைரலான வீடியோ
போட்டியில் சிந்து, சீன வீராங்கனை வாங்கை எப்படி எதிர்கொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், சிந்து திறமையை வெளிப்படுத்தி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதிக்கும் முன்னேறினார்.
அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கடும் சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 706 புள்ளிகள் குறைந்து 80,080.57 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் ஆனது. மும்பை பங்கு சந்தையின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.449 லட்சம் கோடியில் இருந்து ரூ.445 லட்சம் கோடி என சரிந்தது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 211 புள்ளிகள் சரிந்து, (1 சதவீதம்) 24,500.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நடந்தது.
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
மதுரை அழகர் கோவில் வளாகத்திற்குள், உபரி நிதியில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு தடை விதிக்கக் கோரி நாகையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அதே சமயம், கோவில் நிதியில் கட்டப்படும் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மற்ற கட்டுமானங்கள் மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என உறுதி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர் - அக்டோபர் 30-ந்தேதி தொடங்குகிறது
செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுக்களாக பிரிந்து ராஜ்பவன் மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மோப்ப நாய்களின் உதவியோடு தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு, சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என போலீசார் உறுதி செய்தனர்.
பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம்? உளவு தகவல் வெளியீடு
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர் என அந்த மாநிலத்தின் காவல் தலைமையகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்க உறுப்பினர்களான ராவல்பிண்டி நகரை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட் பகுதியை சேர்ந்த அடில் உசைன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் ஆகிய 3 பேரை அடையாளம் கண்டுள்ளது.
7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://tnpsc.gov.in/document/finalresult/04_2025_GR_I_PUB_LIST_28.08.2025.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து, காணலாம்.
தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
காற்று மாசு குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள சராசரி அளவுகளை விட, அதிகமான காற்று மாசு கொண்ட பகுதிகளிலேயே பெரும்பாலான இந்திய மக்கள் வாழ்ந்து வருவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.