பெற்ற தாயிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை: 6 பேர் கைது
மகனின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் அவரை கண்டித்துள்ளார்.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது வாலிபர் ஒருவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த வாலிபர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மனைவி இறந்ததால் மது பழக்கத்துக்கு அடிமையான அந்த வாலிபர் மது போதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகனை கண்டித்துள்ளார். பின்னர் உறவினர்கள் 5 பேரிடம் நடந்த சம்பவத்தை கூறி வாலிபரின் தாய் அழுதுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை அடித்துக்கொலை செய்ததாக வாலிபரின் தாய், உறவினர்கள் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.