‘விசில்' சத்தம் கேட்குமா?
விஜய் தன் கட்சிக்காக கேட்ட 10 சின்னங்களில், தற்போது அவருக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.;
தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் அரசியல் களைகட்டிவிட்டது. அடுத்தமாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் கட்டத்தில், அனைத்து கட்சிகளும் இப்போதே களத்தில் இறங்கிவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறது. அக்கூட்டணியில் புதுவரவாக டாக்டர் அன்புமணி தலைமையில் இயங்கும் பா.ம.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையில் இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சிறிதும் மாற்றமின்றி அப்படியே கட்டுக்கோப்பாக இருக்கும் நிலையில், மேலும் சிலகட்சிகள் வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பக்கம்தான் இப்போது அரசியலில் அனைவரின் பார்வையும் திரும்பியிருக்கிறது. தேர்தல் கமிஷனில் விஜய் தன் கட்சிக்காக கேட்ட 10 சின்னங்களில், இப்போது அவருக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் தேர்தலை சந்திக்கப்போவது இப்போது முதல்முறையாகும். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்த விஜய் இப்போது வெளிவரஇருக்கும் ‘ஜனநாயகன்’ வரை 69 படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் கொடிக்கட்டிப்பறந்து கொண்டிருந்த விஜய், 2009-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றி, அதற்காக தனது படத்துடன் ‘உன்னால் முடியும்’ என்ற வாசகத்துடன் கூடிய தனிக்கொடியையும் உருவாக்கி அரசியல் பக்கம் எட்டிப்பார்த்தார். அதை பயன்படுத்தி பல்வேறு முறைகளில் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட அவர், 2011-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவை அளித்தார்.
2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனியாக களம்கண்டு பல வார்டுகளைக் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் கடலில் குதித்தார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தன் கட்சிக்கு புதியக்கொடியை அறிமுகம் செய்தார். விக்கிரவாண்டியில் நடந்த முதல்மாநாட்டில் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை அறிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதற்காக சி.பி.ஐ. விசாரணையையும் எதிர்கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் படமும் “சென்சார் போர்டு” சிக்கலால் வெளிவராமல் இருக்கிறது.
இப்போது ‘விசில்’ சின்னத்தை பெற்றிருக்கும் விஜய்க்கு விசில் ரொம்ப ராசியானது என்று அவரது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகிறார். விஜய் நடித்த ‘பிகில்’ படத்திலும், ‘கோட்’ படத்திலும் விசில்தான் முக்கிய காட்சியாக அமைந்து இருந்தது. மேலும் விஜய் ‘வி’ என்ற எழுத்தையும் தன் ராசியாகவே கருதுகிறார். அந்தவகையில் அவர் பெயரின் முதல் எழுத்து ‘வி’, முதல் அரசியல் மாநாடு நடத்திய விக்கிரவாண்டியின் முதல் எழுத்து ‘வி’, விசிலின் முதல் எழுத்து ‘வி’. இதெல்லாம் சரிதான், இந்த தேர்தலில் விசில் சத்தம் எப்படி ஒலிக்கப்போகிறது? என்பதை வரும்நாட்கள் அறிவித்துவிடப்போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விசில் சின்னத்தைக் கொண்ட கட்சிக்கு கொக்கிபோடும் முயற்சிகள் நடப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதில் விசில் மாட்டிக்கொள்ளுமா? என்பதற்கும் காலம் பதில்சொல்லும்.