மாணவர்களை முந்திய மாணவிகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.;
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி, பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. தந்தை பெரியார் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்ற பெரிய முனைப்புடன் செயல்பட்டார். ஏன் அவருடைய கட்சியின் முதல் மாநாட்டை செங்கல்பட்டில் 1929-ம் ஆண்டு நடத்திய நேரத்தில், பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்பதை முக்கிய பொருளாகக் கொண்ட தீர்மானத்தில் அனைத்து தொடக்கப்பள்ளிக்கூடங்களிலும் பெண் ஆசிரியைகளே நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பாரதியாரும் பெண்களின் கல்வி குறித்து 'கும்மியடி' பாடலில் கூறியுள்ளார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் "தலைவாரி பூச்சூடி உன்னை- பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை!" என்ற பாடலில்கூட "கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு- பெண்கல்வி, பெண்கல்வி என்கிறது அன்போடு" என்று முடித்திருப்பார். அவர்கள் கண்ட கனவெல்லாம் இப்போது நனவாகிவிட்டது. கடந்தவாரம் வியாழக்கிழமையன்று தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை மட்டுமல்லாமல், அரசாங்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் ஏன் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பல பாடங்களை கற்றுத்தந்திருக்கிறது.
இந்த தேர்வை எழுதியவர்களில் மாணவர்கள் எண்ணிக்கையைவிட மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அதாவது, தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 3,73,178 என்ற நிலையில், மாணவிகளின் எண்ணிக்கை 4,19,316. அதாவது, மாணவர்களைவிட 46,138 மாணவிகள் கூடுதலாக எழுதியுள்ளனர். இது தேர்வு முடிவுகளிலும் எதிரொலித்தது. தேர்வு முடிவில் 3,47,670 மாணவர்கள் தேறியுள்ள நிலையில், மாணவிகள் 4,05,472 பேர் வெற்றி பெற்றனர். இதில் மாணவர்களைவிட 57,802 மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த வித்தியாசம் உயர்படிப்பிலும், வேலைவாய்ப்புகளிலும் காணப்படும்.
இதுதவிர, மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தை பார்த்தாலும், தலைநகராம் சென்னையில் தேர்ச்சி விகிதம் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் சென்னை மாவட்டம் 23-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டும் சென்னை 19-வது இடத்தில்தான் இருந்தது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் சிறிய மாவட்டமாக இருந்தாலும் தேர்ச்சி விகிதத்தில் மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிட்டது. கல்வியில் சிறந்த திருநெல்வேலி மாவட்டம் 16-வது இடத்துக்கு போய்விட்டது. ஆக கல்வி கற்பதில் வளர்ந்த மாவட்டம், வளர்ச்சியடையாத மாவட்டம் என்பது இல்லை. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும், மாணவர்களின் உழைப்புமே தேர்வுமுடிவுகளில் சிறந்த இடத்தைத்தரும் என்பதை இந்த முடிவுகள் பட்டவர்த்தனமாக காட்டிவிட்டது.
கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. ஆக இந்த ஆண்டு உயர்படிப்பு மாணவர் சேர்க்கையில் கட்-ஆப் மதிப்பெண்கள் உயரப்போவது உறுதி. மேலும் நமது மாணவர்களுக்கு திடமான மனதும், எதையும் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தையும் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல மாணவர்கள் தேர்வு நன்றாக எழுதவில்லை என்ற காரணத்துக்காகவும், தேர்வில் தோல்வியுற்ற காரணத்துக்காகவும் தற்கொலை செய்திருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் முடிவுகள் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பு தற்கொலை செய்திருக்கிறார். ஆனால் வெளிவந்த தேர்வு முடிவில் அவர் 413 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். ஆக மாணவர்களுக்கு பாடங்களோடு மனநல வகுப்புகளையும் நடத்தவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.