நீயும் அங்கே; நானும் இங்கே!
இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலுமே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.;
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இருக்கும் பைசரான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் உள்பட 4 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியாவும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலுமே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மோதல்கள் தொடங்கிவிட்டன. போர் பதற்றத்தை இரு நாடுகளும் தவிர்க்குமாறு சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஈரான் மட்டுமல்ல ஐ.நாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்புடனும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடனும் இந்த விவகாரம் குறித்து தொலைபேசியில் பேசினார்.
ஜெய்சங்கருடன் பேசும்போது, 'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதி அளித்துவிட்டு, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் பதற்றத்தை தணிக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப்புடன் பேசும்போது, 'பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக இந்தியா நடத்தும் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்கவேண்டும், இந்தியாவுடன் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இதற்கிடையே இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் விசா வாங்கிக்கொண்டு குடியேறியுள்ள அடுத்த நாட்டு குடிமக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளன. இதனால் இந்தியாவில் உள்ளவர்களை திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்களும், பாகிஸ்தானில் உள்ளவர்களை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றெடுத்த இந்திய பெண்களும் சொல்லொண்ணா துயரம் அடைந்துள்ளனர்.
எல்லையை மூடும் கடைசி நாளில் அட்டாரி-வாகா எல்லையில் இருபுறமும் கண்ணீரும், கம்பலையுமாக இருந்தது. ஒடிசாவில் 35 ஆண்டுகளாக வாழ்ந்து பேரன், பேத்திகளையெல்லாம் கண்ட பாகிஸ்தான் பெண்ணுக்கு, இப்போது இந்தியாவை விட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து ஒரு மகனுக்கு தாயான நிலையில், அந்த சிறுவனுக்கு பாகிஸ்தான் குடியுரிமை இருக்கும்போது அவனுடைய தாயார் இந்தியாவுக்கு திரும்பும் சூழ்நிலையில் அந்த சிறுவன் 'போகாதே போகாதே' என்று கதறி அழுதது மனதை உருக்கும் வகையில் இருந்தது. இந்தியாவில் உள்ள அவுரங்கசீப் என்பவரை திருமணம் செய்த சாராகான் என்ற பாகிஸ்தான் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கும் நிலையில், இப்போது நடந்த (சிசேரியன்) அறுவை சிகிச்சை மூலமாக பிறந்த 14 நாட்களே ஆன குழந்தையுடன் அழுதுகொண்டே பாகிஸ்தான் செல்லும் படம் பத்திரிகைகளில் வந்தது அனைவரின் மனதையும் உலுக்க வைத்தது.
அதிலும் அந்த பெண் என் வயிற்றில் தையல் போட்ட புண்கூட ஆறவில்லை என்று கூறுவது சோகத்தின் உச்சமாக இருக்கிறது. இரு நாட்டிலும் இருந்து எல்லை வழியாக அடுத்த நாட்டுக்கு செல்லும் மக்களின் கண்ணீர் கதைகள் பரிதாபமாக உள்ளது. அடுத்தநாட்டில் அவர்கள் வந்தவுடன் பிறந்த குழந்தைகள் அந்தநாட்டு குடியுரிமையை பெற்றுவிடுவதால், அவர்களை விட்டுவிட்டுத்தான் செல்லும் நிலை இருக்கிறது. நீயும் அங்கே, நானும் இங்கே என்று குழந்தைகள், வாழ்க்கை துணையை தவிக்கவிட்டு பிரிந்து செல்லும் மக்கள் எப்படி யார் பொறுப்பில் இருப்பார்கள்? இதுவரையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியுள்ள 1,465 பேரும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய 786 பேரும் எங்கள் குடும்பங்களை பிரித்துவிடாதீர்கள் என்று விடும் அழுகுரல் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் கேட்கவேண்டும்.