இலக்கை அடைந்து விட்டேன்; நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பிய முதல் தகவல்
இலக்கை அடைந்து விட்டேன் என்று நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பி உள்ளது.
பெங்களூரு,
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது. தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பி உள்ளது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்து உள்ளது.
இதனால், இது ஒரு மறக்க முடியாத தருணம் என்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்தே மாதரம் என்று கோஷங்களை எழுப்பினர்.
நிலவு பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது.
தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.
நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.
சரியாக, இன்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி மாலை 5.22 மணியில் இருந்து தொடங்கியது.
இதன்பின்னர், மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது என இஸ்ரோ அறிவித்தது.
விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. தானாக தரையிறங்கும் திட்ட நிகழ்வு (ஏ.எல்.எஸ்) தொடங்கப்பட்டது. இதனால், லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. இதன்பின்னர், நிலவில் எந்த பகுதியில் தரையிறங்குவது என்ற பகுதியை லேண்டர் தேர்வு செய்தது. பின்னர் தரையிறங்கியது வெற்றி படைத்துள்ளது. இதனால், விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது. விக்ரம் லேண்டரின் வெற்றியால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமடைந்தனர். அவர்கள் எழுந்து நின்று, கரவொலி எழுப்பி, தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.