கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தைவிட ஆபாசப் படம் எவ்வளவோ மேல் - இயக்குநர் பேரரசு

இயக்குநர் சங்கர் சாரதி ஆன்மிகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறதுஎன்று இயக்குநர் பேரரசு காட்டமாக பேசியிருக்கிறார்.
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கவுள்ள இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஸ்னா சாவேரி, சாய் தீனா, தீபா, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு “வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மிகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்.
நான் ’சிவகாசி’ படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாசப் படம் எவ்வளவோ மேல். பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மிகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசியுள்ளார்.






