விநாயகனுக்கு நேசிக்கும் குணம் இருக்கிறது - மம்முட்டி

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
‘களம்காவல்’ படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார்.‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டி படம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு விநாயகன் மேடைக்கு அழைக்கப்பட்ட போது, மரியாதை கலந்த தயக்கத்துடனே மேடைக்கு வந்த அவர் மம்முட்டியிடம் ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர், “எனக்கு எப்படி பேசுவது என்று தெரியாது. அது உங்களுக்கும் தெரியும்” என்று பணிவுடன் கூறினார். உடனே குறுக்கிட்ட மம்முட்டி, “உங்களுக்கு எப்படி பேசுவது என்று தான் தெரியாது, ஆனால் எப்படி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தெரியும்” என்றார்.
தொடர்ந்து விநாயகன் குறித்து பேசிய அவர், “வகுப்பில் ஒரு பையன் குறும்பு செய்தாலும் அவனை எல்லோரும் நேசிப்போம். அது போலத்தான் விநாயகனும். அவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரிடம் அனைவரும் நேசிக்கும் குணமும் இருக்கிறது” என்றார்.






