மூதாட்டியிடம் நட்பாக பழகி ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்ட நடிகை - போலீஸ் வழக்குப்பதிவு

ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக டி.வி. நடிகை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 61 வயது மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூதாட்டிக்கும், கன்னட சின்னத்திரை நடிகையான ஆஷா ஜோஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இதற்கிடையில் அந்த மூதாட்டி, தான் வேலை செய்து வரும் நிறுவனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்வது பற்றி ஆஷாவுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, மூதாட்டியின் செல்போனில் இருந்து, அவருடைய ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை ஆஷா தனது செல்போனுக்கு பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் தனக்கு பணப்பிரச்சினை இருப்பதாகவும், உங்களது கணவரிடம் இருந்து பணம் வாங்கி கொடுங்கள் என்றும் மூதாட்டியிடம் ஆஷா கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த மூதாட்டி மறுத்து விட்டார்.
இதையடுத்து, தன்னிடம் இருக்கும் மூதாட்டியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க ரூ.2 கோடி கொடுக்க வேண்டும் என்றும் ஆஷா மிரட்டியுள்ளார். அத்துடன் சில ஆடியோ ஆதாரங்களையும் மூதாட்டிக்கு போட்டுக்காட்டி ஆஷா மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி நடந்த சம்பவங்கள் குறித்து திலக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆஷா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஷா ஜோஸ் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியான பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா பிளானட் அழகி போட்டியிலும் ஆஷா பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






