பீகார் தேர்தல்: பா.ஜ.க. கூட்டணி கட்சி சார்பில் களமிறங்கிய போஜ்புரி நடிகை - வேட்புமனு நிராகரிப்பு

தொழில்நுட்ப காரணங்களுக்காக நடிகை சீமா சிங்கின் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ந்தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பீகார் சரண் மாவட்டத்துக்கு உட்பட்ட மர்கோரா தொகுதி, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சி சார்பில் இந்த தொகுதியில் பிரபல போஜ்புரி நடிகை சீமா சிங் களமிறக்கப்பட்டார். அவரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அப்போது சில தொழில்நுட்ப காரணங்களுக்காக சீமா சிங்கின் மனு நிராகரிக்கப்பட்டது. இது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனிடம் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார். ஒரு சிறு தவறு காரணமாக இது நிகழ்ந்ததாகவும், அது சரி செய்யப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






